ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஜே.ஜே சில குறிப்புகள்
ஜே.ஜே சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி

ஜே.ஜே சில குறிப்புகள். சு.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுந்தர ராமசாமியின் மாஸ்டர் பீஸ் படைப்பாக கருதப்படுகிறது. இதற்கு முன் இவர் எழுதிய ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலில் இருந்து இது பெரிதும் வேறுபட்டு நிற்கிறது. இந்நாவல் தமிழ் நாவல் கலையின் ஒரு மைல் கல் என்று பல விமர்சகர்களால் கூறப்படுகிறது.  ஆனால் வாசிப்பிற்கு மிகவும் கடின நடையுடன் ‘ஒரு தனி மனிதனின் புரியாத உணர்வுகளை’ புரிய வைக்கும் ஒரு சிரமமான ஒரு நாவலாகவே இது அமைந்துள்ளது.

ஜோசப் ஜேம்ஸ் என்னும் தீவிர இலக்கிய சிந்தனை கொண்ட ஒரு மலையாள எழுத்தாளன்தான் கதா நாயகன்.  மிக தனித்துவ சிந்தனையும் வினோதமான பழக்கங்களும் கொண்ட மலையாள இலக்கியவதியான ஜே.ஜே யை பாலு என்கிற (ஆசிரியர்) தமிழ் எழுத்தாளர் வியந்து தமிழ் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக இக்கதை புனையப்பட்டுள்ளது.   சாதாரணமாக நாம் காணும் இலக்கிய நடையிலிருந்து இது மிகவும் வேறுபட்டு ஒரு ஆவண வடிவில் அமைந்துள்ளது. தெளிவான தேதி, நேரம், இடம், அடிகுறிப்பு (foot note) , வர்ணனைகள் அற்ற மொழி நடை போன்ற அமசங்கள் இந்நாவலை ஒரு சுயசரிதை போன்றோ வரலாற்று குறிப்பு போன்றோ அடையாளம் காட்டி வாசகனை மயங்கச் செய்கிறது.

இந்நாவலை வாசித்த அதே கால கட்டத்தில் அர்ஜெண்டின புரட்சியாளன் சே குவேராவின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஏதோ ஒரு வகையில் எனக்கு ஜே.ஜே சே வாக தெரிந்தான், அல்லது சே ஜே ஜேயாக மாறி நின்றான்.  சே உண்மையான ஆவணம்.  ஜே ஜே கற்பனையால் ஆன ஆவணம்.  உண்மையில் இவ்வம்சமே இந்நாவலின் வெற்றியாகும். மிகப்பெரிய திட்டமிடலுக்குப் பிறகே இந்நாவல் எழுதப்பட்டிருக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

பாலு ஏன் தன் அதர்ஸன எழுத்தாளனாக வேறு ஒரு தமிழ் எழுத்தாளனை பின் தொடரவில்லை. அல்லது ஒரு ஆங்கில எழுத்தாளனை காட்டவில்லை என்று பல நாள் நான் சிந்தித்தது உண்டு. ஆசிரியர் ஒரு மலையாள இலக்கியவாதியை முன்னிறுத்துவதன் நோக்கம், அவர் தமிழ் எழுத்துலகம் பற்றி தான் உணர்ந்த குற்றங் குறைகளை எந்த கட்டுப்பாடும் இன்றி மிகச்சுதந்திரமாக பேச ஒரு பாதுகாப்பான அதேசமயம் நிரம்ப ஒற்றுமைகள் உள்ள ஒரு தளத்தை தேர்வுசெய்துள்ளார்.  ஜே.ஜே, ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?” என்று பாலுவிடம் நையாண்டி செய்வதிலிருந்து இதை உணர முடிகிறது.

அடுத்து, ஜே.ஜே ஒரு தமிழன் என்று சொன்னால், அப்படி யாரும் இல்லை, அவன் ஒரு கற்பனை மனிதன் என்று வாசகனுக்கு உடனே தெரிந்துவிடும். அதே நேரம் மலையாள எழுத்துலக மனிதர்களாக ஜே ஜே, முல்லைக்கல் மாதவன், பேராசிரியர் மேனன், எம். கே. அய்யப்பன் போன்ற பெயர்களை வாசிக்கும் போதும் அவர்களின் விபரங்களை அறியும் போதும் அவர்கள் நிஜ மனிதர்களாகவே தோன்றுவது கதையின் பலம்.

ஜே.ஜே சில குறிப்புகளை வாசிக்கும் போது, ‘இந்த மனிதனுக்கு (ஜே. ஜே) உண்மையில் என்னதான் பிரச்சனை, இப்படி படுத்துகிறானே’ என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டதுண்டு. அவனது வினோத பழக்கங்கள் மிகவும் அன்னியமாக தெரிகின்றன. அவனது அவஸ்தைகளில் என்னால் பங்கெடுக்க முடிவில்லை.

இக்கதையில் என்னை கவர்ந்த அம்சங்களில் ஒன்று... ஜே ஜேயின் நாட்குறிப்பு. மிக இயல்பாக ‘நம்பகத்தன்மையோடு’ இக்குறிப்புகள் அமைந்துள்ளன. ஒரு வரலாற்று நூலில் இடம் பெரும் ஆதாரபூர்வ ஆவணம் போன்று இது அமைந்துள்ளது. எங்கிருந்தும் வாசித்து மகிழலாம்.

இந்நாவல் தமிழ் நாவல் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பலர் கருதுகின்றனர். சி.மோகன் இந்நாவலை இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவல் என்று கூறுகிறார். ஆனால் இது ஒரு சோதனை முயற்சி நாவலாகவே எனக்கு தோன்றுகிறது. காரணம் ஜே.ஜே சில குறிப்புகளுக்குப் பிறகு இதே பாணியில் யாரும் எழுத முற்படவில்லை. மேலான இலக்கிய வட்டங்களில் வாசிக்கப்படும் விவாதிக்கப் படும் ஒரு ப்ரோதோ டைப் நாவலாகவே அமைந்துள்ளது. இது ஒன்றே முன் மாதிரியாகவும் உதாரணமாகவும் நிலைபெற்று நிற்கிறது.





வெள்ளி, 16 செப்டம்பர், 2011

மோகமுள்

மோகமுள்-  தி. ஜானகிராமன்
மோகமுள்-  தி. ஜானகிராமனின் இந்த நாவலை பற்றி கேள்விபட்டு இருபது ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் வாசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த ஆண்டு தமிழகம் சென்றபோது ஆசை ஆசையாக வாங்கி வந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.  இது சில ஆண்டுகளுக்கு முன் திரைப்படமாகவும் வந்தது. நான் பார்கவில்லை.

அடிப்படையில் இது ஒரு காதல் கதை. அதிலும் ’முறனான’ காதல் கதை. அதே சமயம் கர்நாடக சங்கீததை பின் புலமாகக் கொண்டுள்ளது. பாபு, தந்தை வைத்தி வழியாக சங்கீத வழியில் அடி எடுத்து வைத்தவன். அவன் தந்தையின் கனவு அவன் ஒரு வித்வானாக மேடைகளில் கச்சேரி செய்ய வேண்டும் என்பதே. இளம் வயதில் தந்தையின் கனவை ஒட்டி வளர்ந்த பாபு, காளையானதும்  சங்கீத பிடிப்பு தளர்ந்து கல்வி உலகில் வளர முனைகிறான். பாபநாசத்திலிருந்து கும்பகோணத்திற்கு வந்து கல்லூரியில் படிப்பை தொடர்கிறான். கதை முழுதும் கும்பகோணம், துக்கம்பாளையத்து  தெருவும் பாபநாசமும்  மண்வாசனையோடு வீசிக்கொண்டே இருக்கிறது.   கும்பகோணம் மண் பாதங்களில் ஒட்டிக்கொண்டாற்போல் ஒர் உணர்வு

தஞ்சையில் தங்கள் பழைய குடும்ப நண்பர்களான யமுனா குடும்பத்தார்களோடு கும்பகோணத்தில் பழகுகிறான்.  அது வாழ்ந்து கெட்ட குடும்பம். அவர்கள் மாராட்டிய இனத்தார். யமுனா பாபுவைவிட பத்து வயது மூத்தவள். பாபுவின் அக்கா வயது. சிறு வயது முதல் அவனை தூக்கி விளையாடியவள் யமுனா.  யமுனாவின் அம்மா பார்வதி சுப்ரமணீய  ஐயருக்கு இரண்டாம் தாரமாக வாழ்கைபட்டதால் ஜாதி சிக்கல் தோன்றி ஜமுனாவிற்கு வரன் அமைவதில் சிரமம் ஏற்படுகிறது. பாபுவிற்கு யமுனா ஒப்பற்ற தேவதையாகவே தெரிகிறாள்

பாபுவின் வாழ்கையில் புயலாய் வந்து மறைகிறாள் தங்கம்மாள்.  பாபு யமுனாவை தான் காதலிப்பதை உணர்கிறான். அவளிடமே கொட்டித்தீர்கிறான்.

ஜமுனா மறுக்கிறாள். செய்வதரியாது தவிக்கிறாள். ஆனால் பாபுவை தவிர்கவும் முடியாதபடி அவன் உதவி தேவைப்படுகிறது.

இடையே தன் நண்பன் ராஜம் மூலம் சங்கீத குரு ரங்கண்ணாவை சந்திக்கிறான் பாபு.  விடுபட்டு போன சங்கீத பயிற்சி தொடர்கிறது. ரங்கண்ணா பாபுவை சங்கீததில் மேலான நிலைக்கு இட்டுச்செல்கிறார்.

அசிரியர் சங்கீததிற்காக மொழியை இசைப்பது போல் ஒரு பிரம்மை. வாசிக்கும் போதே சங்கீதம் காதில் ஒலிக்கிறது.  இசை அனுபவத்தை மொழியில் விளக்குவது புது பரிமாணத்தை கொடுக்கிறது.

காலம் செல்லச் செல்ல பாபுவின் காதல் இறுகி வைரமாய் மின்னுகிறது. யமுனாவின் வரண்ட வாழ்கை தொடர்கிறது. முடிவில் பாபு வேலை தேடி சென்னை வருகிறான். அவனை தேடி உதவி கேட்டு,  யமுனாவும் வருகிறாள்,..... வேறு மன நிலையிலும் வேறு உடல் நிலையிலும்.

இந்த   நாவலில்  திடீர் திருப்பங்களோ மர்மங்களோ இல்லை. தங்கம்மாள் வரவும் மரணமும் தவிர.  நீண்டு நிதானமாக செல்லும் கதையில் மெளனமான காதலும் தேங்கி நிற்கும் காமமும் இனம் புரியாத மோனத்தையும் ஈர்ப்பையும் நிரந்தரமாக்குகின்றன. அதற்கு ஆசிரியரின் மொழி நடை பெரிதே துணைபுரிகிறது.  கதை எழுதி அறை நூற்றாண்டு கடந்தாலும் வாசிக்கும் போது இன்றைக்கும் புதிய உணர்வுகளையே தருகிறது. வாசித்து முடிந்து சில நாட்கள் கடந்தும் மனம் பாபுவோடு கும்பகோணத்தையும் யமுனா வீட்டையுமே சுற்றி வருகிறது.   சங்கீத நாதம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தி. ஜானகிராமன் காகிதத்தில் எழுதி முடித்து பல ஆண்டுகள் மறைந்து விட்டன... பாபுவும் யமுனாவும் பார்வதியும் ராஜமும் தங்கம்மளும் நம் மனதில் கல்லில் செதுக்கிய சிலயாய் பதிந்து போய் கிடக்கிறார்கள்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

'எதற்காக எழுதுகிறேன்'-- தி.ஜானகிராமன்

 (நண்பர்களே, நான் வாசித்து மகிழ்ந்த, வியந்த பரவசப்பட்ட தமிழ் எழுத்தாளர்களில் - தி.ஜானகிராமன்  மிக முக்கியமானவர். அவர் எழுத்து நடை அற்புதமானது. சுகந்தம் நிறைந்த தென்றலாய் வீசத் துவங்கி முடிவில் மனதில் ஒரு பெரும் புயலின் பாதிப்பை  நிரந்தரம் ஆக்கிவிடும். பெரும்பாலும் அக்ரஹாரத்து மனிதர்களையே அவர் கதை மாந்தராக்கி இருந்தாலும், அவர்கள் அனைவரும் மிக துணிச்சலாக படைக்கப்பட்ட முழுமையான படைப்புகள் ஆகும்.  அவர் ஒரு இலக்கிய கூட்டத்தில் வாசித்த புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை இங்கே பதிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்)
 
 
ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகி றாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடு கிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று ஜிஹ்வா சாபல்யத்தினால் சாப்பிடுகி றோம். சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத் துக்கொள்ளப் போகிறார்களே என்று சாப்பிடுகி றோம். சில பேர் சாப்பிடுவதாற்காகவே சாப் பிடுகிறார்கள். ருசி, மணத்தைக் கூடப் பாராட்டாமல் சாப்பிடுகிறார்கள். நம் நாட்டு அரசியல் பிரமுகர் ஒருவர் அமெரிக்கத் தூத ராலய விருந்து, உடனே கவர்னர் விருந்து, உடனே ராமநவமி உத்சவச் சாப்பாடு மூன்றையும் ஏழிலிருந்து எட்டு மணிக்குள் சாப்பிடுவார். இத்தனை காரணங்கள் எழுத்துக்கும் உண்டு - அதாவது நான் எழுதுகிறதற்கு.
*
பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக் கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாக்ஷிண்யத்திற்காக, எனக்கே எனக்காக, கொஞ்சம் எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு, யாருக்கு என்று தெரியாமல் - இப்படி பல மாதிரியாக எழுதுகிறேன். சில சம யம் நாடகத் தயாரிப்பாளர் சொல்லுகிறார் - ஒரு பிரமிப்பு, ஒரு தினுசான தாக் குதல் ஏற்படுத்த வேண்டும்; பார்க்கிறவர்கள் மனதில் என்று- சரி என்று சொல் கிறேன். கடைசியில் பாக்கும்பொ ழுது, இத்தனை காரணங்களும் அல்லாடி அலைந்து மூன்று கழிகளில் பிரிந்து விழுந்துவிடுகின்றன. எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும் - இந்த மூன்று தினுசு தான் கடைசியாக உண்டு என்று தோன்றுகிறது. இந்த மூன்றும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே எழுத்தில் இருக்கிறாற் போல சில சமயம் ஒரு பிரமை ஏற்படலாம். அது பிரமைதான். உண்மையில்லை.
*
இரவு எட்டு மணிக்குக் காய்கறி வாங்கும்பொழுது, நேற்றுமாலையில் வந்தது, இன்று காலையில் வந்து இன்று முழுவதும் வெயி லில் காய்ந்தது, இன்று மாலை வந்தது மூன்றும் ஒரே குவியலாகக் கிடக்கும். ஆனால் சற்று உற்றுப் பார்த்து, தொடாமல்கூட, கலந்துகட்டி என்று கண்டுபிடித்து விடலாம்.
*
எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப் பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் சொல்ல முடியும்? விஸ்தார மாகச் சொல்ல என்ன இரு க்கிறது? எனக்கே எனக்காக எழுத வேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெ ரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போ தல், வேதனை - எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியைக் காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு - எல்லாம் அதில் இருக்கின்றன. கண்யநஷ்டம், பாபம் பாபம் என்று மூலை யில் முடங் கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனச்சாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள், - இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறு கிற பிடிவாதம், வெறி, அதாவது ஆனந்தம் - எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ மனைவியைக் காதலிக்கிற நல்ல பிள்ளைத் தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்ல பிள்ளையாகத்தான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. மனித வாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் அப்படிச் செய்து விடுகின்றன. இந்த நிர்ப்பந் தத்துக்குப் பணியாதவர்களைக் கண்டு நிர்ப்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்.
*
சரி எனக்கே எனக்காக எழுதும்பொழுது என்ன எழுதுகிறேன்? எப்படி எழுதுகி றேன்? என்ன எழுத வேண்டும் என்று எனக்கு நானே உபதேசம் செய்து கொள் கிறேனோ? பசியே தொழிலாகக் கொண்டிருக்கிற ஏழைகளைப் பற்றி, பிச்சைக் காரர்களைப் பற்றி, பாட்டாளிகளைப் பற்றி, விருப்பமில்லாமல் வழுக்கி விழு ந்த பெண்களைப் பற்றி, பள்ளிக்கூடம் போக முடியாமல், பிண ஊர்வலத்தில் நடனம் ஆடிக்கொண்டு போகிற குழந்தைகளைப் பற்றி, விருப்பமில்லாமல் திருட நேர்ந்தவர்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று வகுத்துக் கொள் கிறேனா? இதையெல்லாம் எழுதி, உன்னைச்சுற்றி சாக்கடை தேங்கிக்கிடக்கி றது... ஏன் பார்க்கவில்லை யென்று சமுதாயத்தைப் பார்த்துக் கோபித்துக் கொள்ள சங்கற்பிக்கிறேனா? அல்லது குடும்ப உறவுகள், உணர்ச் சிகள், கலைஞர்கள், பெரிய உத்தியோஸ்தர்கள், நடுவகுப்பு, உயர்வகுப்பு மனிதர்கள், அவர்களுடைய ஆச்சாரங்கள், சீலங்கள், புருவம் தூக்கும் பாங்கு, கண்ணிய வரம்புகள், மேல்பூச்சுகள், உள்நச்சுகள் இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொள்கிறேனா? அல்லது சிம்ம விஸ்ணு, கரிகாலன், ராணாப் பிரதாப், வல்லவ சேனன், அலெக்ஸாண்டர் - இவர்க ளைப் பற்றி எழுதி பழையகாலத்தை மீண்டும் படைக்க வேண்டும், இன்றைய மனிதனின் மூதாதையரின் நற்குண, துர்குணங் கள், இவற்றையெல்லாம் எழுதி சரித்திரக் கொள்கைகளையோ சித்தாந்தங்களையோ வகுத்து நிலைநாட்ட வேண்டும் என்று எழு தும்பொழுது திட்டம் போட்டுக் கொள்கிறேனா?
*
எனக்கே எனக்காக எழுதும் பொழுது இந்தப் பிடுங்கல்கள் ஏதும் என்னைத் தொந்தரவு செய்வதில்லை. நான் இத்தனை பெய ரைப் பற்றியும் எழுதினாலும் எழுதுவேன், எழுதாமலும் இருப்பேன். யாரைத்தெரியுமோ அவர்களைப்பற்றி எழுதுவேன். அதா வது அவர்கள் அல்லது அதுகள் என்மனதில் புகுந்து, தங்கி, அமர்ந்து என்னைத் தொந்தரவு பண்ணினால் எழுதுவேன். தொந் தரவு தாங்க முடியாமல் போனால்தான் எழுதுவேன். நானாகத் தேடிக் கொண்டு போய் 'உன் னைப் பற்றி எழுதுவதாக உத்தேசம்' என்று பேட்டி காணமாட்டேன் - அப்ஸர்வ் பண்ணமாட்டேன். அவர்களாக, அதுகளாக வந்து என்னைத் தாங்கினால்தான் உண்டு. அதனால்தான் எனக்கு எழுதுவதற்காக யாத்திரை பயணங்கள் செய்வ தில் உற்சாவம் கிடையாது. அதைவிட காதல் செய்து பொழுதைப்போக்கலாம்.(என்ன காதல் என்று நிர்ணயித்துக் கொள்வது என்னுடைய இஷ்டம், வசதி யைப் பொறுத்தது.)
*
அப்படியென்றால் நீர் எழுதுவதற்காகப் பயணம் செய்வதில்லையா என்று யாராவது கேட்டால்? ம்....செய்கிறதுண்டு. அது உங் களுக்காக, உங்களுக்கும் எனக்குமாக எழுதும்பொழுதுதான். அதனால் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம், ஏமாளிகளைப் பிரமி க்க அடிக்கலாம் என்று தோன்றினால் செய்வதுண்டு. நடுநடுவே அல்ப சந்தோசங்கள் படுவதில் தப்பொன்றுமில்லை.
*
ஆக, எனக்குத் தெரிந்தவர்களையும், தெரிந்ததுகளையும் பற்றி எழுதுகிறேன்.... அல்லது என் கண்ணிலும் மனதிலும் பட்டவர்க ளையும் பட்டவைகளைப் பற்றியும் எழுதுகிறேன். சிலசமயம் என்ன அம்மாமி பாஷையாக இருக்கிறதே என்று சிலர் சொல்கி றார்கள். நான் என்ன செய்ய அம்மாமிகளைத்தான் என க்கு அதிகமாகத் தெரியும். ஆத்தாள்களைப் பற்றி ஏதோ சிறிதளவுதான் தெரி யும். தெரிந்த விகிதத்துக்குத்தான் எழுத்தும் வரும்.
*
எதற்கு எழுதுகிறாய் என்று கேட்டதற்கு, என்ன எழுதுகிறேன் என்று சொல்வ தா பதில் என்று யாராவதுகேட்கலாம். எனக்காக என்று சொல்லும் பொழுது, என்ன, எப்படி இரண்டும் சொல்லத்தான் வேண்டும் என்று முன்னாலேயே சொல்லிவிட்டேன். மறு படியும் சந்தேகம் வரப்போகிறதே என்பதற்காக ஞாபக மூட்டினேன்.
*
எப்படி என்ற கேள்விக்குப் பதில் சொல்லுவதுகூட அவ்வளவு கடினமில்லை, ஏனெனில் எனக்காக எழுதுவது சொல்பம்தான். எழுதுகிறது என்னமோ அதிகம் தான். கூலிக்கு மாரடிப்பதும், கோயில் மேளம் வாசிப்பதும் நிறைய உண்டு. ஆனால் அது என் றும் சொந்தத்திற்கு என்று எழுகிற எழுத்தைப் பாதிப்பதில் லை என்று நிச்சயமான உணர்வு இருக்கிறது. கூலிக்கு மாரடித்தால், மார்வலி யோ சோர்வோ இருந்தால்; வலியடங்கிக் சோர்வகன்ற பிறகு அதுவும் அவசி யமானால் முடிந்தால் எழுதுகிறதே தவிர, வலியோடும் சோர்வோடும் எழுதுகி றது கிடையாது. எவனாவது எழுதுவானோ அந்த மாதிரி! எழுதத்தான் முடியு மா? திரானி எங்கே இருக்கும்?
*
எப்படி எழுதுகிறேன் என்று சொல்வதைவிட எப்படி எழுத ஆரம்பிக்கும் நிலை க்கு வருகிறேன் என்று சொல்வதுதான் இன்னும் பொருந்தும். புகையிலையை மென்றுகொண்டு சும்மா உட்கார்ந்து மனம் சுற்றி ஒன்றை முற்றுகையிடுகிற, வழிகாணாமல் தவிக் கிற, வழி காணப் பறக்கிற ஆட்டங்களைப் பார்த்துக் கொண்டே உட்காந்திருக்கிறேன். சாப்பிடும் பொழுது வேறுவேலைசெய்யும் பொழுது, வேறுஏதோ எழுதும்பொழுது, யாருடனோ பேசும்பொழுது இந்த அமர்க் களமும் தவிர்ப்பும் நடந்துகொண்டுதானிருக் கின்றன. நடப்பது தெரிகிறது. வழி தெரிந்ததும் எழுதமுடிகிறது. அவ்வளவுக்கு மேல் அதைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை.
*
கலை வடிவத்துக்கும் எனக்காக எழுதுவதற்கும் என்ன சம்பந்தம்? எனக்காக எழுதுவது எல்லாம் கடைசல்பிடித்த கலைவடிவம் கொண்டிருக்க வேண்டுமா? அவசியம் இல்லை. கலைவடிவம் என்பது தவத்தையும், அதன் தீவிரத்தையும் பொறுத்தது. அந்த முனைப்பு சிறு நொடியிலோ, பல வருடங்களிலோ சாத்தி யமாகலாம். காலம் முக்கியம் என்றாலும் அவ்வளவு முக்கியமில்லை. உணர் வின் அனுபூதியின், அமுங்கி முழுகுவதின் தீவிரத் தன்மைதான் முக்கியமா னது. இது எனக்காக எழுதும் எழுத்திலும் சாத் தியம். உங்களுக்காக எழுதும் எழுத்திலும் சாத்தியம். எனக்காக எழுதும் எழுத்தில் கலைவடிவம் சில சமயம் மூளியாகவோ, முழுமை பெறாமலோ, நகாசு பெறாமலோ இருக்கலாம். ஆனால் அதுதான் அதன் வடிவம். அதாவது மூளியும் முழுமையில் லாததும் அதனுடைய ஒரு அம்சம்.
*
கூலிக்காக நான் எழுதும் எழுத்திலும் அல்லது உங்கள் சந்தோஷத்துக்காக நான் எழுதும் எழுத்திலும் கலைவடிவம் என்ற ஒன் றைக் கொண்டுவந்துவிட முடியும். இங்கு கலை வடிவம் என்பது பயிற்சியின், சாதகத்தின் ஒரு விளை வாகப் பரிணமித்து விடுகி றது. இந்த இடத்தில்தான் ஒரு முக்கியமான வேற் றுமைதோன்றுகிறது. கலைக்கும் நுண் தொழிலுக்கும் உள்ள வேற்றுமை அது. சில சமயம் நான் செய்கிற நுண் தொழிலைக் கண்டு கலைவடிவம் என்று தப்பாகப் புரிந்து கொண்டு விடுபவர்கள் உண்டு. அப்படிச் சொல்லி என்னையே ஏமாற்றப் பார்ப்பார்கள்.
*
ஆனால் எனக்குத் தெரியும் எது கொம்பில்பழுத்தது, எதை நான் தடியால் அடி த்து குடாப்பில் ஊதிப்பழுக்க வைத்திருக்கிறேன் என்று. எனக்காக நான் எழு தும் போது, கொம்பில் பழுத்த பழம். நான் பண்ணிய தவத்தின் முனைப்பில் பழுத்த பழம் அது. என் தவம் எத்தனைக் கெத்தனை தீவிரமாக ஒன்றிப்பிலும் தன் மறப்பிலும் கனிந்து எரிகிறதோ அப்போது வடிவம் தானாக அமைந்து விடும். அது சிலசமயம் மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்கலாம். ஆனால் பூப்புநிலையில் பூவில் இட்ட முட் டை வண்டாக வளர்கிறமாதிரி, அதை நான் தடுத்திருக்கமுடியாது. அந்த ஒரு கறுப்பு, கசப்பு எல்லாம் அதன் அம்சம். தவிர்க்க முடியாத நிலையில் எழுதப்பட்ட விதி. இந்தக் கனிவில்தான், இந்த தவத்தில்தான் என் சுயரூபம் எனக்குத் தெரிகிறது. என்னு டைய உள் பிரபஞ்சத்தில் உள்ளதெல்லாம் மேலே மேலே இருள் நீங்கி என் சிந்தைக்கும் உணர்விற்கும் புலனாகிறது. என் தவம் மிக மிக, மேலும் மேலும் என் சுயரூ பம் எனக்குத் தெரியும். அதற்கு வளர்ச்சி என்றோ மாறுதல் என்றோ பெயர்க ளிட நான் விரும்பவில்லை.
*
இந்தக் கலைவடிவம்தான் வடிவம். இதை ஒரு மரச்சட்டமாகச் செய்து இறுகச் செய்துவிடுகிறார்கள் இலக்கியச் சட்டம் சேர்க்கிற தச்சர்கள். அதை வைத்துக் கொண்டு பிறகு வரும் கலைவடிவங்களையும் பிறருடையவற்றையும் அதி லே பொருத்திப் பார்க்கி றார்கள். தானே வடித்த வடிவத்தை, சட்டத்தில், திரு வாசியில் அடைக்க முடியாது. இப்படி அடைத்து, சமஸ்கிருத நாடகத்தை வள ரவிடாமல் அடித்த ஒரே பெருமை தச்சர்களுக்கு உண்டு. சமஸ்கிருத நாடகம் சூம்பிப் போனதற்கு, பல காரணங்களில் இதுவும் ஒன்று.
*
அதற்காகத்தான் மீண்டும் சொல்கிறேன். கலைவடிவம் என்னுடையது. என் தவத்தின் பெருமையைப் பொருத்தது. மூளியும் அதன் பெருமை. சட்டம் போட்டு என்னைப் பயமுறுத்தாதீர்கள் என்று. நான் உங்களுக்காக எழுதுகிற தைப் பற்றி நீங்கள் அந்தத் தீர்ப்பெல்லாம் சொல்லலாம். நான் கவலைப்பட வில்லை. வாலைப் போட்டுவிட்டு பல்லியைப் போல் தப்பிவிடுவேன்.
*
(சென்னையில் 08.04.1962ல், 'எதற்காக எழுதுகிறேன்' என்ற தலைப்பில் நடந்த எழுத்தாளர் கருத்தரங்கில் தி.ஜானகிராமன் வாசித்த கட்டுரை. - எழுத்து/ மே 1962)
*
(பின் குறிப்பு: இந்தக் கட்டுரையை தமிழ்ப் பூக்கள் வலைபதிவில் கண்டெடுத்தேன். திரு தாஜ் அவர்களுக்கு  நன்றி)
 
நன்றி: தி.ஜானகிராமன்/ நினைவோடை - சுந்தரராமசாமி.
தட்டச்சு & வடிவம்: தாஜ்