ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஜே.ஜே சில குறிப்புகள்
ஜே.ஜே சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி

ஜே.ஜே சில குறிப்புகள். சு.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் சுந்தர ராமசாமியின் மாஸ்டர் பீஸ் படைப்பாக கருதப்படுகிறது. இதற்கு முன் இவர் எழுதிய ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலில் இருந்து இது பெரிதும் வேறுபட்டு நிற்கிறது. இந்நாவல் தமிழ் நாவல் கலையின் ஒரு மைல் கல் என்று பல விமர்சகர்களால் கூறப்படுகிறது.  ஆனால் வாசிப்பிற்கு மிகவும் கடின நடையுடன் ‘ஒரு தனி மனிதனின் புரியாத உணர்வுகளை’ புரிய வைக்கும் ஒரு சிரமமான ஒரு நாவலாகவே இது அமைந்துள்ளது.

ஜோசப் ஜேம்ஸ் என்னும் தீவிர இலக்கிய சிந்தனை கொண்ட ஒரு மலையாள எழுத்தாளன்தான் கதா நாயகன்.  மிக தனித்துவ சிந்தனையும் வினோதமான பழக்கங்களும் கொண்ட மலையாள இலக்கியவதியான ஜே.ஜே யை பாலு என்கிற (ஆசிரியர்) தமிழ் எழுத்தாளர் வியந்து தமிழ் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக இக்கதை புனையப்பட்டுள்ளது.   சாதாரணமாக நாம் காணும் இலக்கிய நடையிலிருந்து இது மிகவும் வேறுபட்டு ஒரு ஆவண வடிவில் அமைந்துள்ளது. தெளிவான தேதி, நேரம், இடம், அடிகுறிப்பு (foot note) , வர்ணனைகள் அற்ற மொழி நடை போன்ற அமசங்கள் இந்நாவலை ஒரு சுயசரிதை போன்றோ வரலாற்று குறிப்பு போன்றோ அடையாளம் காட்டி வாசகனை மயங்கச் செய்கிறது.

இந்நாவலை வாசித்த அதே கால கட்டத்தில் அர்ஜெண்டின புரட்சியாளன் சே குவேராவின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஏதோ ஒரு வகையில் எனக்கு ஜே.ஜே சே வாக தெரிந்தான், அல்லது சே ஜே ஜேயாக மாறி நின்றான்.  சே உண்மையான ஆவணம்.  ஜே ஜே கற்பனையால் ஆன ஆவணம்.  உண்மையில் இவ்வம்சமே இந்நாவலின் வெற்றியாகும். மிகப்பெரிய திட்டமிடலுக்குப் பிறகே இந்நாவல் எழுதப்பட்டிருக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

பாலு ஏன் தன் அதர்ஸன எழுத்தாளனாக வேறு ஒரு தமிழ் எழுத்தாளனை பின் தொடரவில்லை. அல்லது ஒரு ஆங்கில எழுத்தாளனை காட்டவில்லை என்று பல நாள் நான் சிந்தித்தது உண்டு. ஆசிரியர் ஒரு மலையாள இலக்கியவாதியை முன்னிறுத்துவதன் நோக்கம், அவர் தமிழ் எழுத்துலகம் பற்றி தான் உணர்ந்த குற்றங் குறைகளை எந்த கட்டுப்பாடும் இன்றி மிகச்சுதந்திரமாக பேச ஒரு பாதுகாப்பான அதேசமயம் நிரம்ப ஒற்றுமைகள் உள்ள ஒரு தளத்தை தேர்வுசெய்துள்ளார்.  ஜே.ஜே, ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?” என்று பாலுவிடம் நையாண்டி செய்வதிலிருந்து இதை உணர முடிகிறது.

அடுத்து, ஜே.ஜே ஒரு தமிழன் என்று சொன்னால், அப்படி யாரும் இல்லை, அவன் ஒரு கற்பனை மனிதன் என்று வாசகனுக்கு உடனே தெரிந்துவிடும். அதே நேரம் மலையாள எழுத்துலக மனிதர்களாக ஜே ஜே, முல்லைக்கல் மாதவன், பேராசிரியர் மேனன், எம். கே. அய்யப்பன் போன்ற பெயர்களை வாசிக்கும் போதும் அவர்களின் விபரங்களை அறியும் போதும் அவர்கள் நிஜ மனிதர்களாகவே தோன்றுவது கதையின் பலம்.

ஜே.ஜே சில குறிப்புகளை வாசிக்கும் போது, ‘இந்த மனிதனுக்கு (ஜே. ஜே) உண்மையில் என்னதான் பிரச்சனை, இப்படி படுத்துகிறானே’ என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டதுண்டு. அவனது வினோத பழக்கங்கள் மிகவும் அன்னியமாக தெரிகின்றன. அவனது அவஸ்தைகளில் என்னால் பங்கெடுக்க முடிவில்லை.

இக்கதையில் என்னை கவர்ந்த அம்சங்களில் ஒன்று... ஜே ஜேயின் நாட்குறிப்பு. மிக இயல்பாக ‘நம்பகத்தன்மையோடு’ இக்குறிப்புகள் அமைந்துள்ளன. ஒரு வரலாற்று நூலில் இடம் பெரும் ஆதாரபூர்வ ஆவணம் போன்று இது அமைந்துள்ளது. எங்கிருந்தும் வாசித்து மகிழலாம்.

இந்நாவல் தமிழ் நாவல் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பலர் கருதுகின்றனர். சி.மோகன் இந்நாவலை இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவல் என்று கூறுகிறார். ஆனால் இது ஒரு சோதனை முயற்சி நாவலாகவே எனக்கு தோன்றுகிறது. காரணம் ஜே.ஜே சில குறிப்புகளுக்குப் பிறகு இதே பாணியில் யாரும் எழுத முற்படவில்லை. மேலான இலக்கிய வட்டங்களில் வாசிக்கப்படும் விவாதிக்கப் படும் ஒரு ப்ரோதோ டைப் நாவலாகவே அமைந்துள்ளது. இது ஒன்றே முன் மாதிரியாகவும் உதாரணமாகவும் நிலைபெற்று நிற்கிறது.





கருத்துகள் இல்லை: