வெள்ளி, 16 செப்டம்பர், 2011

மோகமுள்

மோகமுள்-  தி. ஜானகிராமன்
மோகமுள்-  தி. ஜானகிராமனின் இந்த நாவலை பற்றி கேள்விபட்டு இருபது ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் வாசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. கடந்த ஆண்டு தமிழகம் சென்றபோது ஆசை ஆசையாக வாங்கி வந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.  இது சில ஆண்டுகளுக்கு முன் திரைப்படமாகவும் வந்தது. நான் பார்கவில்லை.

அடிப்படையில் இது ஒரு காதல் கதை. அதிலும் ’முறனான’ காதல் கதை. அதே சமயம் கர்நாடக சங்கீததை பின் புலமாகக் கொண்டுள்ளது. பாபு, தந்தை வைத்தி வழியாக சங்கீத வழியில் அடி எடுத்து வைத்தவன். அவன் தந்தையின் கனவு அவன் ஒரு வித்வானாக மேடைகளில் கச்சேரி செய்ய வேண்டும் என்பதே. இளம் வயதில் தந்தையின் கனவை ஒட்டி வளர்ந்த பாபு, காளையானதும்  சங்கீத பிடிப்பு தளர்ந்து கல்வி உலகில் வளர முனைகிறான். பாபநாசத்திலிருந்து கும்பகோணத்திற்கு வந்து கல்லூரியில் படிப்பை தொடர்கிறான். கதை முழுதும் கும்பகோணம், துக்கம்பாளையத்து  தெருவும் பாபநாசமும்  மண்வாசனையோடு வீசிக்கொண்டே இருக்கிறது.   கும்பகோணம் மண் பாதங்களில் ஒட்டிக்கொண்டாற்போல் ஒர் உணர்வு

தஞ்சையில் தங்கள் பழைய குடும்ப நண்பர்களான யமுனா குடும்பத்தார்களோடு கும்பகோணத்தில் பழகுகிறான்.  அது வாழ்ந்து கெட்ட குடும்பம். அவர்கள் மாராட்டிய இனத்தார். யமுனா பாபுவைவிட பத்து வயது மூத்தவள். பாபுவின் அக்கா வயது. சிறு வயது முதல் அவனை தூக்கி விளையாடியவள் யமுனா.  யமுனாவின் அம்மா பார்வதி சுப்ரமணீய  ஐயருக்கு இரண்டாம் தாரமாக வாழ்கைபட்டதால் ஜாதி சிக்கல் தோன்றி ஜமுனாவிற்கு வரன் அமைவதில் சிரமம் ஏற்படுகிறது. பாபுவிற்கு யமுனா ஒப்பற்ற தேவதையாகவே தெரிகிறாள்

பாபுவின் வாழ்கையில் புயலாய் வந்து மறைகிறாள் தங்கம்மாள்.  பாபு யமுனாவை தான் காதலிப்பதை உணர்கிறான். அவளிடமே கொட்டித்தீர்கிறான்.

ஜமுனா மறுக்கிறாள். செய்வதரியாது தவிக்கிறாள். ஆனால் பாபுவை தவிர்கவும் முடியாதபடி அவன் உதவி தேவைப்படுகிறது.

இடையே தன் நண்பன் ராஜம் மூலம் சங்கீத குரு ரங்கண்ணாவை சந்திக்கிறான் பாபு.  விடுபட்டு போன சங்கீத பயிற்சி தொடர்கிறது. ரங்கண்ணா பாபுவை சங்கீததில் மேலான நிலைக்கு இட்டுச்செல்கிறார்.

அசிரியர் சங்கீததிற்காக மொழியை இசைப்பது போல் ஒரு பிரம்மை. வாசிக்கும் போதே சங்கீதம் காதில் ஒலிக்கிறது.  இசை அனுபவத்தை மொழியில் விளக்குவது புது பரிமாணத்தை கொடுக்கிறது.

காலம் செல்லச் செல்ல பாபுவின் காதல் இறுகி வைரமாய் மின்னுகிறது. யமுனாவின் வரண்ட வாழ்கை தொடர்கிறது. முடிவில் பாபு வேலை தேடி சென்னை வருகிறான். அவனை தேடி உதவி கேட்டு,  யமுனாவும் வருகிறாள்,..... வேறு மன நிலையிலும் வேறு உடல் நிலையிலும்.

இந்த   நாவலில்  திடீர் திருப்பங்களோ மர்மங்களோ இல்லை. தங்கம்மாள் வரவும் மரணமும் தவிர.  நீண்டு நிதானமாக செல்லும் கதையில் மெளனமான காதலும் தேங்கி நிற்கும் காமமும் இனம் புரியாத மோனத்தையும் ஈர்ப்பையும் நிரந்தரமாக்குகின்றன. அதற்கு ஆசிரியரின் மொழி நடை பெரிதே துணைபுரிகிறது.  கதை எழுதி அறை நூற்றாண்டு கடந்தாலும் வாசிக்கும் போது இன்றைக்கும் புதிய உணர்வுகளையே தருகிறது. வாசித்து முடிந்து சில நாட்கள் கடந்தும் மனம் பாபுவோடு கும்பகோணத்தையும் யமுனா வீட்டையுமே சுற்றி வருகிறது.   சங்கீத நாதம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தி. ஜானகிராமன் காகிதத்தில் எழுதி முடித்து பல ஆண்டுகள் மறைந்து விட்டன... பாபுவும் யமுனாவும் பார்வதியும் ராஜமும் தங்கம்மளும் நம் மனதில் கல்லில் செதுக்கிய சிலயாய் பதிந்து போய் கிடக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: